லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வீரர் திலக் வர்மா ரிட்டயர்ட் அவுட் செய்யப்பட்டார்.
ஒரு அசாதாரண தந்திரோபாய நடவடிக்கையாக இது மாறியது. ஸ்கோரிங் விகிதத்தை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மும்பை இறுதியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் போராடினாலும். நமன் திர் 24 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து மீண்டும் இன்னிங்ஸை மீட்டெடுத்தார்.
ஒரு முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய திலக் வர்மா, ரன் எடுக்க போராடி 23 பந்துகளில் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால், அவரை ரிட்டயர்ட் அவுட் செய்து மிட்செல் சாண்ட்னரை மும்பை இந்தியன்ஸ் களமிறக்கியது.
ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் ஒரு வீரருக்கு ரிட்டயர்ட் அவுட் கொடுத்து வெளியேற்றுவது இது நான்காவது முறையாகும்.
இதற்கு முன்னர் அதர்வா தைடே, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர்.
மிட்செல் சாண்ட்னர் திலக் வர்மாவிற்குப் பதில் களமிறக்கப்பட்டாலும், அவரும் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.