Saturday, January 10, 2026 7:10 am
சிபிஐ, அமலாக்கத்துறை , வருமான வரித்துறைஆகியவற்றின் வரிசையில் பாஜகவின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்க இழுத்தப்படும் சூழலில், சென்சார் போர்டுக்கு ஸ்டாலின் கண்டனம் கூறியுள்ளார்.
டிசம்பர் 18ஆம் திகதியே தணிக்கை சபையிடம் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கப்பட்ட போதும், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. நீதிமன்ற படிகள் ஏறிய போதும், ஜனநாயகன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடியாமல், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கடைசி நிமிடத்தில்தான் கிடைத்துள்ளது.
இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பராசக்திக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட போது, 25 இடங்களில் காட்சிகள், வசனம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் 52 இடங்களில் வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளது. உச்சமாக முன்னாள் முதல்வர் அண்ணா பேசும் வசனங்கள் 22 நொடிகள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பராசக்தி திரைப்படம் முழு ஆன்மாவுடன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சென்சார் போர்டின் செயல்பாடுகள் குறித்த விவாதம் நடந்து வருகிறது. ஏற்கனவே ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய பாஜக அரசு தடுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனநாயகன் மற்றும் பராசக்தி படங்களுக்கு ஆதரவாக சென்சார் போர்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வரிசையில் பாஜகவின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டது. கடுமையான கண்டனங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் சென்சார் போர்டு மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

