பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு (ஓகஸ்ட்) 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளது. நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 2025.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை இறங்குதுறை அபிவிருத்திக்கு 3455 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.பலாலி விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு 82 மில்லியன் ரூபாய், 2023 ஆம் ஆண்டு 15 மில்லின் ரூபாய், 2024 ஆம் ஆண்டு 76 மில்லியன் ரூபாய், 2025 ஆம் ஆண்டு (ஆகஸ்ட்) 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளது.
1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவைகள் திணைக்கள திட்டமிடல் இலக்கம் (PPA) 1597 பிரகாரம் பலாலி விமான நிலையத்துக்கு 349 ரூட் 03 பேச்சர்ஸ் 35. 9 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக செலுத்தப்பட்ட நட்டஈடு தொடர்பான தகவல்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ளன.ஏனைய காணிகள் சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்படவில்லை. இதற்கான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன.
பலாலி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்பது பொறுத்தமானதாக அமையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்காக காணிகள் கைப்பற்றப்படவில்லை என்றார்.