Tuesday, January 13, 2026 8:03 pm
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு தொழிலதிபரும் , சினிமா தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தலாம் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் டாஸ்மார்க் நிர்வாகத்தில் 1000 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதை அமலாக்கத்துறை விசாரணை செய்து வந்தது.. விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது உறுதியானது. இந்த ஊழலில் முதல்வர் மு.க ஸ்டாலின் நெருங்கிய உறவினரான சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்,தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக புகார் சொன்ன அமலாக்கத்துறை அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தியது.
மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து சில ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஆனால் இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து அவருக்கு ஆதரவாக தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்பி அவரிடமே கொடுக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையில் ‘தேவைப்படும்போது ஆகாஷ் பாஸ்கரனிடம் சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம்’ என தீர்ப்பு வந்திருக்கிறது. இதையடுத்து விரைவில் அமலாக்க துறையின் விசாரணை ஆகாஷ் பாஸ்கரன் பக்கம் மீண்டும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த ஆகாஷ் பாஸ்கரன்தான் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

