பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு சட்டவிரோதமாக தனது சட்டப் பட்டம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, “இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளது.
முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ஷ சட்டப் பரீட்சையை குளிரூட்டப்பட்ட அறையில் எழுதியதாகவும், முன்கூட்டியே வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும், இணைய வசதியுடன் கூடிய கணினி வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, இது நிரூபிக்கப்பட்டால், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என்று கூறினார்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல தரப்பினர் ஏற்கனவே குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.