ஈடன் கார்டன் மைதானத்தில் டோனி சிக்சர் விளாச, சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணி ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது. 180 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன், சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
கப்டன் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளுக்கு 48 ஓட்டங்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மனீஷ் பாண்டே, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, ரசல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 179 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
ஆயுஷ் மாத்ரே, டேவன் கான்வே ஆகிய இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். ஐபிஎல்-இல் தனது முதல் போட்டியில் விளையாடிய உர்வில் படேல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அது நீண்ட நேரத்திற்கு நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்திருந்த அவர் அவுட்டாகி வெளியேறிய நிலையில், மறுமுனையில் விக்கெட்டும் சரிந்து கொண்டிருந்தது.
அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவால்ட் பிரேவிஸ், கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறடித்தார். 25 பந்துகளில் 52 ஓட்டங் களை எடுத்திருந்த அவரும் அவுட்டாகி வெளியேறிய நிலையில், சென்னை அணி பரிதாபமான சூழலில் சிக்கியது.
பின்னர், டோனியுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடிய துபே 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், டோனி அடித்த சிக்ஸ் போட்டியை சென்னை அணி பக்கம் திருப்பியது.
19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது சென்னை அணி. இதன் மூலம், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டும் இல்லாமல் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழக்க செய்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் டோனி 153 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். அத்துடன் 47 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை (153+47) எடுக்க உதவியை முதல் விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையை தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் 174 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி 14* ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 100* முறை ஆட்டம் இழக்காது களத்தில் இருந்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையையும் டோனி படைத்துள்ளார்.
1. எம்எஸ் தோனி: 100*
2. ரவீந்திர ஜடேஜா: 80
3. கைரன் பொல்லார்ட்: 52
4. தினேஷ் கார்த்திக்: 50
5. டேவிட் மில்லர்: 49
அபாரமாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ் 25 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசி திருப்பு முனையை உண்டாக்கினார். குறிப்பாக வைபவ் ஆராரோ வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என 30 ஓட்டங்கள் தெறிக்க விட்ட அவர் போட்டியை தலைகீழாக மாற்றினார்.
ரகானேவை அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா, பிரிமியர் லீக் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த சென்னை வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோவை (140 விக்கெட், 116 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். ஜடேஜா, 184 போட்டியில், 141 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
பிரிமியர் லீக் அரங்கில் 5000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இணைந்தார் ரகானே. இதுவரை 197 போட்டியில், 5017 ஓட்டங்கள் (2 சதம், 33 அரைசதம்) குவித்துள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 9வது வீரரானார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனை பாராட்டும் விதமாக, போட்டிக்கு முன் மைதானத்தின் ‘மெகா’ ஸ்கிரீனில், ‘இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறோம்’ என்று காண்பிக்கப்பட்டது. அப்போது கோல்கட்டா, சென்னை அணி வீரர்கள் அணிவகுத்து நிற்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று இருந்த, நடப்பு சாம்பியனான கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமிருந்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால், சென்னை அணிக்கு எதிராக நேற்று தோற்றதன் மூலம் கொல்கத்தாவின் பிளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது. ஏற்கனவே இரண்டு அணிகள் 16 புள்ளிகளும், ஒரு அணி 15 புள்ளிகளும், ஒரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கொல்கத்தா கிட்டத்தட்ட நடப்புத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. எற்கனவே சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராத் அணிகள்,பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.