நவீனமான ஏடிஎம் மெஷின் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க ஏ.டி.எம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மக்களின் சிரமத்தை தவிர்க்க, வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் முறை மாற்றப்பட்டு தற்போது ஏடிஎம்களின் மூலம் பணத்தைப் பெற்ற முடிகிறது.
ஆனால் சீனா இந்த நடைமுறையை முற்றிலும் மாற்றி உள்ளது. வங்கிகளில் சென்று தங்க நகையை விற்று பணம் பெறப்படும் முறையை மாற்றி, அதற்கு பதிலாக 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் கோல்டு ஏடிஎம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது சீனா.
ஷாங்காயில் அமைக்கப்பட்டுள்ள இந்த தங்க ஏடிஎம்மில் தங்க நகைகளை கொடுத்தவுடன், அதன் அளவு தூய்மை மற்றும் எடையை சரிபார்த்து, அதற்குரிய தொகையை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது. இதில் மூன்று கிராம் முதல் ஒரு கிலோ எடை வரை கொண்ட தங்க நகையை உருக்கி பணமாகப் பெற முடியும்.
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் நடத்தப்படும் இந்த ஏடிஎம், குறைந்தது 50% தூய்மை கொண்ட தங்கப் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது. இது தங்கத்தை உருக்கி, அதன் தரம் மற்றும் எடையைச் சரிபார்த்து, பின்னர் அதற்குச் சமமான மதிப்பை 30 நிமிடங்களுக்குள் விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றுகிறது. இதற்கு எந்த ஆவணங்களும் அல்லது அடையாள அட்டையும் தேவையில்லை.