யாழ்ப்பாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையில் மேலுமொரு சட்டவிரோத கட்டடம் ஒன்று , இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு விகாரதிபதியிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டு பௌத்த மத வழிபாடுகள் நடைபெற்றன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் அங்கு போராட்டம் செய்தனர். பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், விகாரை வளாகத்தில் மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் திஸ்ஸ விகாரை வளாகத்தில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கடந்த ஆண்டு மே மாதமளவில் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.
அப்போது யாழ் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் இல்லை என்றும் அவர் அக்கால பகுதியில் கூறியிருந்தார்.

