பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.
பாமக நிறுவனரான ராமதாஸ் ஏற்கனவே தனது பேரன் முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அந்த விவகாரம் கட்சி மேடையிலேயே பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ராமதாஸே அந்த பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார்.