தபால் துறைக்குள் மோசடி , திறமையின்மை தொடர்பான பல சம்பவங்களை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ருவன் சத்குமார வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரிகளின் இத்தகைய தவறான நடத்தைகளால் தான் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார்.
உலக அஞ்சல் தினத்தைக் குறிக்கும் வகையில் அப்புத்தளை தபால் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய சத்குமார, முறையான கைரேகை பதிவுகள் இல்லாமல் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளாக மில்லியன் கணக்கான ரூபாய் மோசடியாகக் கோரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், சில ஊழியர்கள் வாகன சேவைக்காக கூடுதல் நேர ஊதியம் கோருவதாகவும், பெரும்பாலும் தேவையானதை விட அதிகமான தொழிலாளர்களைப் பட்டியலிட்டு, வேலை நேரத்தை உயர்த்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிலிமத்தலாவையிலிருந்து கொழும்பில் உள்ள உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அதன் இலக்கை அடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனதாக சமீபத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி, போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அஞ்சல் விநியோகத்தில் ஏற்படும் தாமதங்களை விமர்சித்தார்