அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்தின் ஆகியோர் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலமான ஆங்கரேஜில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பை முடித்துக் கொண்டனர், இதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
நகரத்தில் உள்ள கூட்டுத் தளமான எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் ஒரு ரஷ்ய அரச தலைவரின் முதல் அமெரிக்க விஜயமாகவும், 2021 க்குப் பிறகு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பாகவும் அமைந்தது.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் ட்ரம்புடன் இணைந்தனர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ,ஜனாதிபதி உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகியோர் புட்டினுடன் சென்றனர்.
பின்னர் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ட்ரம்ப் “பல விஷயங்கள்” ஒப்புக் கொள்ளப்பட்டதாகக் கூறினார், “பெரிய முன்னேற்றம்” ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார், இருப்பினும் முறையான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றார்.
உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாக புட்டின் கூறினார், எட்டப்பட்ட புரிதல் அமைதியை நோக்கி வழி வகுக்கும் என்றும் கூறினார்.
செய்தியாளர்கள் முன் சுமார் 12 நிமிடங்கள் ஒன்றாக நின்று, இரு தலைவர்களும் முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர், ஆனால் உறுதியான விவரங்களை வழங்கவில்லை.
இந்த சந்திப்பு உக்ரைன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான “வணிக” மற்றும் “நடைமுறை” உறவுகளை மீட்டெடுப்பதற்கும் ஒரு “தொடக்கப் புள்ளியாக” செயல்படும் என்று புட்டின் நம்பிக்கை தெரிவித்தார்.