இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பது “அமெரிக்க தொழில்துறையில் நாம் இதுவரை கண்டிராத ஒரு ஓட்டையை ஏற்படுத்தும்” என்று ஃபோர்டு தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எச்சரித்தார்.
பல ஆண்டுகளாக, அமெரிக்க வாகன விநியோகச் சங்கிலிகள் அதன் இரண்டு அண்டை நாடுகளுடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒரு காரை அசெம்பிள் செய்வதற்கு முன், அதன் பாகங்கள் அமெரிக்கா, மெக்சிகோ ,கனடா ஆகிய நாடுகளிடையே இடையே பல பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.
மெக்சிகோ , கனடா ஆகியவற்ரின் மீதான அமெரிக்க வரிகள் வட அமெரிக்கா முழுவதும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து, கார் விலைகள் உயரும் என்ற அச்சத்தைத் தூண்டுகின்றன.
வடக்கு மெக்சிகோவின் மான்டேரியில் உள்ள ஏலியன் பிளாஸ்டிக்ஸ் பட்டறையில், அமெரிக்காவிலிருந்து உருகிய பிளாஸ்டிக் அச்சு குழிக்குள் செலுத்தப்பட்டு, ஹெட்லைட் ஷெல்கள் போன்ற பிளாஸ்டிக் கார் பாகங்களை உருவாக்குகிறது.
இந்த பிளாஸ்டிக் பாகங்களின் உற்பத்தி முடிந்ததும், அவை கூறுகளை இணைப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும், பின்னர் முழு வாகனத்தையும் இணைப்பதற்காக மெக்சிகோவிற்குத் திருப்பி அனுப்பப்படும் என்று நிறுவனத்தின் பொது மேலாளர் பெலிப் வில்லாரியல் தெரிவித்தார். இறுதியாக, வாகனம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.
“இந்த செயல்முறை வட அமெரிக்க வாகனத் தொழில் சங்கிலி முழுவதும் நெருக்கமான ஒத்துழைப்பின் சுருக்கமாகும்” என்று வில்லாரியல் கூறினார்.
கூடுதல் வரிகள் அமெரிக்கத் தயாரிப்பு கார்களைப் பாதுகாக்கின்றன என்று வாஷிங்டன் கூறினாலும், முற்றிலும் அமெரிக்கத் தயாரிப்பு கார் இல்லை. இன்று, வாகன உற்பத்தியாளர்கள் கார்களை உருவாக்க உலகளாவிய வளங்களைப் பயன்படுத்துகின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் டிரக்காக இருக்கும் ஃபோர்டின் F-150 பிக்அப் டிரக் கூட, அமெரிக்க தொழிற்சாலைகளில் இருந்து பாதிக்கும் குறைவான பாகங்களைப் பெறுகிறது.
கடந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு சுமார் 8 மில்லியன் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மெக்சிகோ அமெரிக்காவின் முன்னணி கார் இறக்குமதி கூட்டாளியாக முன்னிலை வகித்தது, சுமார் 3 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்தது. கனடா நான்காவது இடத்தில் உள்ளது, அமெரிக்காவிற்கு சுமார் 1.1 மில்லியன் யூனிட்களை ஏற்றுமதி செய்தது.
அதிக செலவுகள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, மிகக் குறைந்த வருமானம் ஈட்டும் 20 சதவீத அமெரிக்க நுகர்வோரால் ஒரு புதிய காரை வாங்க முடியவில்லை. இன்று, அது கீழ்மட்ட 40 சதவீதத்தினரால் தான் என்று ஆட்டோமொடிவ் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக்கான மூத்த துணைத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் கூறினார்.