Saturday, February 21, 2026 9:33 am
ஒழுங்காக போய்க்கொண்டிருந்த உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய குழப்பதை ட்ரம்ப் ஏற்படுத்தியிருந்தார். பரஸ்பர வரி என்று சொல்லி அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது வரியை விதித்திருந்தார் ட்ரம்ப். ஆனால், இந்த வரி இனி செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனால் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரியை விதிக்கிறதோ, அதே அளவுக்கு மற்ற நாடுகள் மீதும் வரியை விதிப்பது தான் பரஸ்பர வரி என்று சொல்லப்படுகிறது. இது குறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், பரஸ்பர வரி என்பதே சட்டவிரோதம் என்று கூறியிருக்கிறது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், நீதிபதிகள் சோட்டோமேயர், காகன், ஜாக்சன் , கன்சர்வேட்டிவ் நீதிபதிகளான நீல் கோர்சச், ஆமி கோனி பாரெட், கிளாரன்ஸ் தாமஸ் , சாமுவேல் அலிட்டோ ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் மொத்தம் 6 நீதிபதிகள் பரஸ்பர வரி தவறு என்றும், 3 நீதிபதிகள் சரி என்றும் கூறினர். பெரும்பான்மை கருத்து ஏற்கப்படும் என்பதால், பரஸ்பர வரி தவறு என்கிற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த விஷயத்தை பொறுத்தவரை, நீதிமன்றம் எளிமையான வாதங்களைதான் முன்வைத்து. அதாவது வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது, மாறாக பாராளுமன்றத்திற்கே இருக்கிறது என்பதுதான் அந்த வாதம். ட்ரம்ப் வரியை விதிக்க 1977ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘அவசரக்கால பொருளாதார அதிகாரம்’ சட்டத்தை பயன்படுத்தியிருந்தார். ஆனால், இந்த சட்டம் வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்த மட்டும்தான் கொண்டுவரப்பட்டது என்றும், புதிய வரிகளை விதிக்க அதிகாரம் கொடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், வரி விதிக்கும் அதிகாரத்தை நிர்வாக தரப்பினரிடம் கொடுக்கவில்லை. அதாவது அ ஜனாதிபதியோ, , துணை ஜனாதிபதியோ நேரடியாக வரியை போட முடியாது. மாறாக, பாராளுமன்றம்தான் வரியை விதிக்க முடியும். இதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியவுடன் கடும் டென்ஷன் ஆன ட்ரம்ப், நீதிபதிகள் மீது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே தனக்கு எதிராக தீர்ப்பு கொடுத்திருப்பதை ட்ரம்ப் ஏற்கவில்லை.
பரஸ்பர வரிக்கு பதிலாக, அரசியலமைப்பு சட்டம் 122ஐ பயன்படுத்தப்போவதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்த சட்டத்தின் கீழ் 15% வரை வரியை போட முடியும். ஆனால், 150 நாட்கள் வரைதான் இந்த வரிகள் இருக்கும். அதன் பின்னரும் வரி தொடர வேண்டும் எனில், நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

