Friday, April 10, 2026 4:18 pm
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கட்டாரில் நடைபெற இருந்த டோஹா டைமண்ட் லீக் தடகள போட்டி ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உலக தடகள போட்டிகளில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று டைமண்ட் லீக். நடப்பு 2026ம் ஆண்டு சீசனின் முதல் சுற்று போட்டி கட்டார் தலைநகர் டோஹாவில் மே 8ம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஈரான், அமெரிக்கா , இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம்,குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, தடகள வீரர்கள் ,ரசிகர்கள் ஆகியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மே 8ம் திகதி நடக்க இருந்த போட்டி ஜூன் 19ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் சீரடைந்தால் மட்டுமே போட்டி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் கட்டாரில் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதால், போட்டியின் மைதானமும் மாற்றப்பட்டுள்ளது. முதலில் கட்ட்ர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி, தற்போது அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட கலிபா சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தான் 2019 உலக தடகள சம்பியன்ஷிப் , 2022 உலகக் கிண உதைபந்தாட்டம் ஆகியன வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

