Monday, November 10, 2025 1:37 pm
நடிகர் விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் பாடல் பிரபல தெலுங்குப் படப் பாடலின் சாயலை கொண்டிருப்பதும், அதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும் அரசியல் ரீதியாக கவனத்தைப் பெற்றுள்ளன.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மையக் கதைக்களம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதையைத் தழுவியது என்று ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது.
தற்போது வெளியான ‘தளபதி கச்சேரி’ பாடலின் காட்சியமைப்புகள், ‘பகவந்த் கேசரி’ படத்தில் இடம்பெற்ற ‘கணேஷ் ஆந்தம்’ பாடலை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.’ஜனநாயகன்’ திரைப்படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
காட்சியமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு பாடல்களுக்கும் இடையே ஒரு முக்கிய அரசியல் வேறுபாடு உள்ளது. ‘பகவந்த் கேசரி’ பாடலில் பாலகிருஷ்ணா பிள்ளையாரை போற்றிப் பாடுவார்.
ஆனால், ‘ஜனநாயகன்’ படத்தில், பிள்ளையாருக்குப் பதிலாக, விஜய் பாடும்போது அவருக்குப் பின்னணியில் தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் காட்டப்படுகின்றன.
“ஆவோ டூகெதர் பையா பையா… சாதி பேதம் எல்லா லேதய்யா” போன்ற சமூக நீதி மற்றும் சமத்துவத்தைப் பேசும் வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன.
இந்த ‘தளபதி கச்சேரி’ பாடல், ஒருபுறம் விஜய்க்கு ரசிகர்களின் உற்சாகமான farewell பாடலாக கருதப்படுகிறது, மறுபுறம் அவரது வருங்கால அரசியல் வருகைக்கும் இந்தப் பாடல் மற்றும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

