நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோர் மீது அமுலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஏப்ரல் 9 ஆம் திகதி டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் வெளிநாட்டுத் தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்து புகாரை பரிசீலிக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள்,அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 44 மற்றும் 45 இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அடுத்த விசாரணையில் வழக்கு டைரிகளை சமர்ப்பிக்க அமலாக்கத் துறையின் சிறப்பு ஆலோசகர் மற்றும் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
கூடுதலாக, இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சொத்துக்களில் டெல்லியில் உள்ள ஹெரால்ட் ஹவுஸ், மும்பை , லக்னோவில் உள்ள ஏஜேஎல் கட்டடங்கள் ,ஜிண்டால் சவுத் வெஸ்ட் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட வளாகங்கள் ஆகியவை அடங்கும்.