Friday, April 10, 2026 4:01 pm
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் சைக்கிளில் பயணம் செய்தார். அப்போது அவரை மேலும் ரசிகர்கள் சூழ்ந்ததால் சைக்கிளில் இருந்து இறங்கி பிரசார வாகனத்தில் ஏற சென்ற போது தடுமாறி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரசார வாகனத்தில் சென்றார். திருப்பத்தூர் அருகே விஜய் பிரச்சார வாகனத்தை இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை முடித்துக் கொண்டு விஜய் புறப்பட்ட நிலையில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானோர் சென்றனர்.
பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்றதால் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு விபத்தில் சிக்கினர்
விஜய் காரைக்குடி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்ய 12 மணி முதல் 2.30 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் 2.30 மணியை தாண்டியும் அவரால் ரசிகர்கள் கூட்டத்தில் ஊர்ந்து செல்ல முடிகிறதே தவிர, சேர வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை.
இதனால் அவர் சைக்கிளில் இறங்கி பயணம் செய்தார். இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. அவர் சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் அவரது பின்னால் ஏராளமானோர் ஓடி வந்தனர். அப்போது விஜய் கூட்டத்தில் மேலும் சிக்கிக் கொண்டார். சைக்கிளில் செல்ல முன்கூட்டியே அனுமதி வாங்கவில்லை என பொலிஸார் தடுத்தனர். இதனால் சைக்கிளில் இருந்து இறங்கிய விஜய் பிரச்சார வாகனத்தில் செல்ல முயன்ற போது கூட்டம் முண்டியடித்ததால் விழும் நிலைக்குச் சென்றார். உடனே அருகே இருந்த பவுன்சர்கள் பிடித்துவிட்டனர். இதையடுத்து பிரசார வாகனத்தில் ஏறி சென்றார்.
விஜய்யை காண காரைக்குடியில் பிரச்சாரம் செய்யும் இடம் அருகே கடும் வெயிலில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர். இதையடுத்து ஒரு வழியாக பிரச்சாரம் செய்ய வேண்டிய இடத்திற்கு சென்றநிலையில் நேரம் தாண்டியதால் பிரசாரம் செய்யாமல் சென்றுவிட்டார். இதனால் கூட்டத்தில் வெயிலில் தண்ணீர் இல்லாமல் காத்திருந்த பலரும் ஏமாற்றமடைந்தனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு இடங்களில் சாமியானா பந்தல் போடப்பட்ட விஜய்யின் பிரச்சார கூட்டங்கள் நடந்து வந்தன. ஆனால் காரைக்குடியில் திறந்தவெளியில் பலரும் வெயிலில் காத்திருந்தனர்.

