நீண்ட காலமாக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய சேதேஷ்வர் புஜாரா, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
13 ஆண்டுகால தனது சிறப்பான சர்வதேச வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தப் புஜாரா, தான் பெற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துள்ளார்.
சேதேஷ்வர் புஜாரா கடைசியாக 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.
அதன்பிறகு, இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்ததால், அவர் புறக்கணிக்கப்பட்டார்.
தனது உறுதியான பேட்டிங் நுட்பம் , தளராத பொறுமைக்காக அறியப்பட்ட 37 வயதான சேதேஷ்வர் புஜாரா, ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு மிக முக்கியமான 3வது இடத்தை தனதாக்கிக் கொண்டார்.
தனது 103 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வாழ்க்கையில், அவர் 43.6 சராசரியில் 7,195 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் 19 சதங்கள், 35 அரை சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ரன் 206 (நாட் அவுட்) ஆகும்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அவரது பங்களிப்பு குறைவாக இருந்தாலும் (2014-க்கு முன்னர் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார்), டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்.