கொழும்பு சர்வதேச பட்டத்திருவிழா ஓகஸ்ட் 24, ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெறும்.
2015 ஆம் ஆண்டு லோகாய சஹா லோகாயோ திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கிய இந்தத் திருவிழா, சர்வதேச அளவில் பாராட்டையும் பங்கேற்பையும் பெற்று, உலகத் தரம் வாய்ந்த விழாவாக உருவெடுத்துள்ளது. மலேசியா, தாய்லாந்து, இந்தியா, சீனா , பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மதிப்புமிக்க பட்ட விழாக்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர், ஏற்பாட்டுக் குழு இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐந்து கண்டங்களில் உள்ள 25 நாடுகளைச் சேர்ந்த 55 சர்வதேச பட்டம் விடும் வீரர்கள் கலந்து கொள்வார்கள்.ஜேர்மனி, நெதர்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, தென் கொரியா, பிறேஸில், துனிசியா, துருக்கி, அல்ஜீரியா, லிபியா, நேபாளம், இந்தியா, சிங்கப்பூர், ரீயூனியன் தீவு, பிரான்ஸ், கம்போடியா, உக்ரைன், அவுஸ்திரேலியா , வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன – ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான பட்டம் விடும் மரபுகளையும் கலாச்சாரத் திறமையையும் கொண்டு வருகின்றன.