விநியோகிக்கப்படாமல் இருக்கும் அனைத்துக் கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் கூறினார்.
உரிய அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.