கியூபா, ஹைட்டி, நிகரகுவா , வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்துஅமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த 5,32,000 க்கும் மேற்பட்வர்களின் சட்டப் பாதுகாப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இரத்து செய்ய உள்ளது.
அரசியல் ரீதியாக நிலையற்ற நாடுகளிலிருந்து குடியேறுபவர்கள் அக்டோபர் 2022 முதல் அமெரிக்காவில் நுழைந்து தற்காலிகமாக வசிக்க அனுமதித்த மனிதாபிமான பரோல் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவு சட்ட சவால்களைத் தூண்டியுள்ளது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேறியவர்களின் கூட்டணி இந்த திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்த வழக்குகளைத் தாக்கல் செய்கிறது.
ஜோ பைடன் நிர்வாகம் முன்னர் இந்த நாடுகளிலிருந்து மாதத்திற்கு 30,000 பேர் வரை வேலை தகுதியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்திருந்தது.
இது சட்டவிரோத எல்லைக் கடப்புகளுக்கு சட்டப்பூர்வ மாற்றாக செயல்படுகிறது.தற்போது, திட்டம் நிறுத்தப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள் இப்போது சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.