Tuesday, July 15, 2025 10:36 am
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தனது ஏமன் வணிக கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மரணதண்டனையை ஒத்திவைக்கும் முயற்சியில், அரசாங்கமும், வக்காலத்து குழுக்களும், செல்வாக்கு மிக்க மதத் தலைவர்களும் கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
“நிமிஷா பிரியாவின் விஷயத்தில், ஜூலை 16, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையை ஏமனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளதாக அறியப்படுகிறது,” என்று செய்தி நிறுவனங்கள் PTI மற்றும் ANI செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
சவுதி அரேபியாவில் அப்துல் ரஹீமை காப்பாற்ற முன்னர் உதவிய அறக்கட்டளை, மஹ்தியின் குடும்பத்தினர் இரத்த பணத்தை ஏற்க ஒப்புக்கொண்டால், இப்போது ₹11 கோடியை வழங்க தயாராக உள்ளது.
அதேபோல, எந்தவொரு தீர்வுக்கும் தலா ₹1 கோடி நன்கொடை அளிப்பதாக கொடையாளர்களான எம்.ஏ. யூசுப் அலி மற்றும் பாபி செம்மனூர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
மறுபுறம், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி, காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார், இந்த வழக்கில் தலையிட்டுள்ளார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு அல்லது இரத்தப் பண இழப்பீட்டை அனுமதிக்கும் ஷரியா சட்டத்தின் கீழ் அவரது பிரதிநிதிகள் இப்போது மஹ்தியின் குடும்பத்தினருடன் பேசி வருவதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

