உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், மார்ச் தொடக்கத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் திணக்களம் தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை (27) நடைபெறும் கலந்துரையாடலில் அப்போது உள்ளாட்சித் தேர்தல்களுக்கான திகதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல்களை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி தேர்தல் திணைக்களத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தெரிவிக்கையில்,
“நிர்வாகச் சிக்கல் காரணமாக இந்த மாதத்திற்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாது.
வேட்புமனுக்கள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 14 முதல் 17 நாட்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இருப்பினும், இந்த மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டால், மார்ச் 10 ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் வேட்புமனு தாக்கல் காலம் தொடங்க வேண்டும். அந்த வாரத்தின் வியாழக்கிழமை விடுமுறை நாளாக இருப்பது ஒரு பிரச்சினையாகும், ஏனெனில் வேட்புமனுக்கள் தொடர்ந்து மூன்றரை நாட்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதைத் தவிர்க்க, மார்ச் மாத தொடக்கத்தில் நாங்கள் அறிவிப்பை வெளியிடுவோம், ”என்றார்.
உள்ள்ளூராட்சித் தேர்தல்கள் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் திணக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.