சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் WHO இன் 78வது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்ட , இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார்.
இந்தக் கூட்டம் குறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகக் கூறினார்.
“இலங்கையில் 1,000 புதிய ஆரம்ப சுகாதார மையங்களை அமைத்தல், சர்வதேச அமைப்புகள் , நன்கொடையாளர்களிடமிருந்து ஆதரவைப் பெறுதல் , WHO உதவியுடன் எங்கள் சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் போன்ற பல முக்கிய துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம்,” என்று அவர் கூறினார்.
WHO வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சுகாதார வல்லுநர்கள் இலங்கையை விட்டு வெளியேறும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், நாட்டில் நடைபெற்று வரும் WHO ஆதரவு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் சுகாதார அமைச்சர் மதிப்பாய்வு செய்ததாகவும் எடுத்துரைத்தார்.
விரைவில் இலங்கைக்கு வருகை தந்து 2025 அக்டோபரில் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு டாக்டர் டெட்ரோஸுக்கு அழைப்பு விடுத்ததாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, முதல் செயலாளர் நிஷாந்தினி விக்டர் மற்றும் பல அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.