Tuesday, February 3, 2026 3:37 pm
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் 80, 90-களின் பொற்காலத்தை இசையால் மலர செய்த பழம்பெறும் இசையமைப்பாளர் எஸ். பி. வெங்கடேஷ் சென்னையில் காலமானார். 70 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறந்தார்.
1955 மார்ச் 5-ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்த வெங்கடேஷ், 1981-ல் வெளியான ‘பிரேம யுத்தம்’ என்ற தெலுங்குப் படம் மூலம் சுயாதீன இசை அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர், தம்பி கண்ணந்தானம் இயக்கிய மோகன்லால் நடித்த ‘ராஜாவின்டே மகன்’ படம் மூலம் மலையாளத்தில் இசை அமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் இறுதியில் தொடங்கினார். தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றி, பின்னர் முழுநேர இசையமைப்பாளராக வளர்ந்தார். பல மூத்த இசையமைப்பாளர்களின் கீழ் பணிபுரிந்த அனுபவம், அவருடைய இசையில் ஒரு தனித்துவமான மெலடிக்கும், கிளாசிக்கல் தொனிக்கும் அடித்தளமாக அமைந்தது.
1981-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘பிரேம யுத்தம்’ (Prema Yuddha) மூலம் தனித்துவமான இசையமைப்பாளராக அறிமுகமானார். 1980, 1990-களில் மலையாள சினிமாவில் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக எஸ்.பி. வெங்கடேஷ் உயர்ந்தார்.
1993-ம் ஆண்டு, ‘பைத்ருகம்’ மற்றும் ‘ஜனம்’ படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது எஸ்.பி. வெங்கடேஷ்க்கு வழங்கப்பட்டது. இது அவரது இசை வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது.
1985-2000 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை எஸ்.பி. வெங்கடேஷ் உருவாக்கினார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் இதுவரை 150 படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ்.பி. வெங்கடேஷ், தனது திரை வாழ்வில் தமிழ், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
வெங்கடேஷின் தந்தை பழனி ஒரு மாண்டலின் கலைஞர். தந்தையிடம் சீடராகச் சேர்ந்து, மூன்று வயதிலிருந்தே வெங்கடேஷ் மாண்டலின் வாசிக்கத் தொடங்கினார். பின்னர் கிட்டார் மற்றும் பிற இசைக் கருவிகளையும் கற்றுக்கொண்டார். தனது ஆரம்ப காலத்தில் ரவீந்திரன், ஏ.டி. உம்மர் ஆகியோரின் இசை உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

