ஆசிய கிண்ண சம்பியனான இந்தியாவிடம் சம்பியன் கிண்ணத்தைக் கொடுக்க
ஆசிய கிறிக்கெற் கவுன்சிலை மேற்பார்வையிடும் தலைவர் மொஹ்சின் நக்வி, மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கப்டன் சூர்யகுமார் யாதவை அலுவலகத்திலிருந்து நேரில் வந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை(செப்டம்பர் 30) செய்தி வெளியிட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கிண்ண நிகழ்வில் மொஹ்சின் நக்வி தலைமையிலான ACC குழு சம்பியன் கிண்ணத்துடனும், பதக்கங்களுடனும் மைதானத்தை விட்டு வெளியேறியதும் குழப்பம் ஏற்பட்டது.
இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, மேடைக்கு அழைக்கப்படுவதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தது.
எனினும் பின்னர் நக்வி கையால் சம்பியன் கிண்ணத்தை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. எமிரேட்ஸ் கிறிக்கெற் சபையின் துணைத் தலைவரிடம் சம்பியன் கிண்ணத்தை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டது.
நக்வி அந்தக் கோரிக்கையை மறுத்து, தன்னிடமிருந்து சம்பியன் கிண்ணத்தை இந்தியாபெற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இந்திய அணி மேடையில் ஏற காத்திருந்தபோது, ACC அதிகாரிகளில் ஒருவர் சம்பியன் கிண்ணத்தை மைதானத்திலிருந்து எடுத்துச் செல்வதைக் காணக்கூடிய அபத்தமான காட்சிகள் நடைபெற்றது.
ஆசியக் கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவின் தொடர்ச்சியான கோரிக்கையை மொஹ்சின் நக்வி நிராகரித்ததாகவும், இந்தியக் கப்டன் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் செய்தி வெளியிட்டன.
துபாயில் நக்வி தலைமையில் நடைபெற்ற வழக்கமான ACC கூட்டத்தின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தப் பிரச்சினை ACC கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று நக்வி பதிலளித்தார்.