சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆதிக்க அதிகார அரசியலை எதிர்ப்பதில் சீனாவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்திற்குப் பிறகு பேசிய வாங், டிராகனும் யானையும் இணைந்து செயல்பட வேண்டும் என, இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு குளோபல் சவுத்தை வலுப்படுத்தும் என்றும் சர்வதேச உறவுகளை ஜனநாயகப்படுத்தும் என்றும் கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் கருத்துக்களுக்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.
இருப்பினும், நேரடி விமானங்கள், பத்திரிகையாளர் பரிமாற்றங்கள் மற்றும் மத யாத்திரைகளை மீண்டும் தொடங்குவது உட்பட, இந்தியாவும் சீனாவும் மிகவும் நிலையான உறவை நோக்கிச் செயல்படுவதாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சமீபத்தில் சுட்டிக்காட்டினார்.