சீனா, கனடா , மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் ஏற்றுமதிகள் மீது தனது நிர்வாகம் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியதை அடுத்து, பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா ,மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளும் அறிவித்துள்ளன. இதனால் வட அமெரிக்கா முழுவதும் வர்த்தக பதற்றங்கள் அதிகரித்துள்ளது.
125 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகள் மீது மூன்று வாரங்களில் இரண்டாவது சுற்று வரிகள் விதிக்கப்படும் என்பதை கனடா ஜனாதிபதி ட்ரூடோ உறுதிப்படுத்தினார். அடுத்த வரிகள் ஆட்டோமொபைல்கள், எஃகு , அலுமினியம் உள்ளிட்ட முக்கிய துறைகளை குறிவைக்கும்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், கட்டணங்கள் அமலுக்கு வந்தால் மெக்சிகோ மாற்றுத் திட்டங்களைக் கொண்டுள்ளது என்று உறுதியளித்தார்.
“எங்களிடம் B, C, D திட்டம் உள்ளது,” என்று விவரங்களை வெளியிடாமல் ஷீன்பாம் கூறினார்.வாஷிங்டனில் இருந்து எந்தவொரு வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பதிலளிக்க மெக்சிகோவின் தயார்நிலையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா விதிக்கவுள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சோயாபீன்ஸ், சோளம், மாட்டிறைச்சி, நீர்வாழ் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்ட பல அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு சீனா, 10% பதிலடி வரிகளை அறிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.