Saturday, January 24, 2026 11:16 am
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடி ஆட்டம் ஆடினார். 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்ததோடு, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் புதிய சாதனை படைத்தார்.
கடந்த போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்திருந்தார். அந்தச் சாதனையை இரண்டே நாட்களில் இஷான் கிஷன் முறியடித்துள்ளார். இஷான் கிஷன், 21 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
முதல் 6 ஓவர்கள் முடிவில் (பவர் பிளே) இஷான் கிஷன் 23 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்திருந்தார். ரி20 வரலாற்றில் பவர் பிளே ஓவர்களுக்குள் இந்திய வீரர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக 2025ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா 58 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக உள்ளது.

