தமிழ்நாட்டில் அதிமுகவுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வருகிற 2026 சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக திரும்பியுள்ளது. சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அமித்ஷாவும் இன்று சந்தித்துப் பேசினர். அதன் பிறகு செய்தியாளர்களை இரு தலைவர்களும் கூட்டாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது அண்ணாமலை, புதிய தலைவராகவுள்ள நயினார் நாகேந்திரன், அதிமுக தரப்பில் கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமித்ஷா கூறியதாவது:
வருகிற 2026 சட்ட.சபைத் தேர்தலை அதிமுக ,தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற கட்சிகளுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி ஆட்சியையும் நாங்கள் நிச்சயம் அமைப்போம்
கூட்டணியில் இணைவதற்கு அதிமுக தரப்பு எந்த நிபந்தனையையும் நாங்கள் வைக்கவில்லை. இது இயல்பான கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விகவகரத்தில நாங்கள் தலையிடப் போவதில்லை. தேர்தலில் வெற்றிக்குப் பின்னர் கூடிப் பேசி அமைச்சரவை அமைப்போம். பொது செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் கூட்டணி செயல்படும்.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே நீட் தேர்வு விவகாரம், தொகுதி மறுவரையறை ஆகிய பிரச்சினைகளை திமுக கையில் எடுத்து வருகிறது. நீட் தேர்வு குறித்து அதிமுகவுடன் பேசுவோம் என்றார் அமைச்சர் அமித்ஷா.