அதிமுகவிலிருந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரேயன் இன்று திடீரென திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் அதிமுக மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் பல மூத்த முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில் தங்கள் பகுதிகளில் வலுவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் பல மூத்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் சிறுபான்மை தலைவர்களின் முக்கியமானவருமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.