Friday, February 13, 2026 8:46 am
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத்தொடரில் தொடரில், நமீபியாவுக்கு எதிரான தனது இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் அடித்தது. நமீபியா 18.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 116 ஓட்டங்கள் எடுத்து 93 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்திய அணி 6.5 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்து, ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த அணி என்ற சாதனையை படைத்தனர்
விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், 24 பந்துகளில் 61 ஓட்டங்கள் அடித்தார். 6 பவுண்டரிகள் , 5 சிக்ஸர்களை விளாசிய அவர், 20 பந்துகளில் அரைசதம் எட்டி, ரி20 உலகக் கிண்ணத்தொடரில் இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன்களில் ஒருவரானார். ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்
ரி20 உலகக் கிண்ணத்தில் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர் டோனியின் பெயரில் இருந்தது. 2007ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டோனி 33 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நமீபியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியன தலா 8 முறை வென்றுள்ளது.

