Thursday, February 12, 2026 4:36 pm
இந்திய நாடாலுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கடந்த 1ம் திகதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த்ததை சுட்டிக்காட்டி கடும் வார்த்தைகளால் மத்திய அரசை சாடினார்.
இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே Substantive Motion அடிப்படையில் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்த நோட்டீஸ் என்பவர் மூலமாக பதவியில் உள்ள முக்கிய நபரின் மீது நடவடிக்கையை கோர முடியும். அந்த வகையில் தான் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்து அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை போடும் வகையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வழங்கிய நோட்டீஸில், ‛‛ராகுல் காந்தி ‛தி சோரோஸ்’ அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் USAID உடன் தொடர்பு வைத்துள்ளார். தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பேசி வருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். உறுதியான ஆதாரங்கள் இன்றி மத்திய அரசின் கண்ணியத்தை குறைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். நம் நாட்டுக்குள் இருந்தே இந்தியாவை சீர்க்குலைக்கும் குண்டர் கும்பலின் முக்கிய அங்கமாக ராகுல் காந்தி மாறி உள்ளார். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆதாரமற்ற குற்றசசாட்டுகளை கூறி வருகிறார். மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு ராகுல் காந்தியின் இத்தகைய செய நம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, அரசியலமைப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிரானதாக உள்ளது. இதனை கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் அவரை பதவி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக Substantive Motion நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் அது இன்னும் ஏற்கப்படவில்லை. இந்த நோட்டீஸ் ஏற்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் அதுதொடர்பாக விவாதம் நடத்தப்படும். அந்த விவாதத்துக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றி ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது தான் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விஷயத்தில் லோக்சபா என்ன முடிவு எடுக்கிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் Substantive Motion தீர்மானம் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. கடந்த 1997 ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தர பிரதேச அரசியல் நிலைமை மற்றும் அப்போதைய ஆளுநர் ரோமேஷ் பண்டாரியின் செயல்பாடு தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸை அப்போதைய சபாநாயகர் பிஏ சங்மா ஏற்றார். உத்தர பிரதேசத்தில் பாஜக முதல்வர் கல்யாண் சிங் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றி ஆளுநர் ரோமேஷ் பண்டாரி டிஸ்மிஸ் செய்தார். அதன்பிறகு காங்கிரஸின் ஜெகதாம்பிகா பால் முதல்வரானார். இதனால் பாஜகவினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது தான் அதன் நோக்கமாகும். ஆனால் அதற்குள் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் பாஜகவின் கல்யாண் சிங் ஆட்சி உத்தரபிரதேசத்தில் கொண்டு வரப்பட்டது. இப்படியான சூழலில் தான் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அத்தகைய நோட்டீஸ் வழங்கி உள்ளது கவனம் பெற்றுள்ளது.

