Monday, March 30, 2026 4:00 pm
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் இவர் இதுவரை 252 தேர்தல்களில் போட்டியிட்டு தற்போது 253 ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் டாக்டர் கே. பத்மராஜன். 1988-ஆம் ஆண்டு முதல் இன்று வரை, அதாவது 2026 சட்டமன்றத் தேர்தல் வரை, சுமார் 38 ஆண்டு காலமாகத் தொடர்ந்து 252 தேர்தல்களில் போட்டியிட்டு வரும் இவருடைய அரசியல் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது.
டயர் ரீட்ரேடிங் கடை வைத்திருக்கும் இவர், தனது தோல்விகளையே சாதனைகளாக மாற்றி கின்னஸ் உலக சாதனை, லிம்கா புத்தகம் ஆகியவற்றில் ‘உலகின் அதிக முறை தோல்வியுற்ற வேட்பாளர்’ என்ற இடத்தைப் பிடித்துள்ளார். பத்மராஜன் இதுவரை 252-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில் பஞ்சாயத்துத் தேர்தல் முதல் இந்திய ஜனாதிபதித் தேர்தல் வரை அனைத்து நிலைகளிலும் அவர் களம் கண்டுள்ளார்.
6 முறை ஜனாதிபதித் தேர்தல், 6 முறை துணை ஜனாதிபதித் தேர்தல், 32 முறை பஇந்திஅய் நாடாளுமன்றத் தேர்தல் 50-க்கும் மேற்பட்ட மாநிலங்களவைத் தேர்தல் ஆகியவற்றில் அவர் போட்டியிட்டுள்ளார்.
ஜே.பி. நட்டா, நரேந்திர மோடி, ஜெயலலிதா, கருணாநிதி, வாஜ்பாய், மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்ற இந்திய அரசியலின் ஜாம்பவான்களை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரே சுயேச்சை வேட்பாளர் இவர்தான்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், கடந்த 30 ஆண்டுகளில் தனது தேர்தல் செலவுகளுக்காக அவர் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை , வேட்புமனு தாக்கல் செய்ய பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் பயணச் செலவு என அனைத்தையும் தனது டயர் கடை வருமானத்திலிருந்தே அவர் ஈடுகட்டுகிறார். இதுவரை அவர் செலுத்திய வைப்புத் தொகையில் ஒருமுறை கூட அது அவருக்குத் திரும்பக் கிடைத்ததில்லை (வைப்புத் தொகை திரும்பப் பெற குறைந்தபட்ச வாக்குகளை அவர் பெற்றதில்லை). 2011-ஆம் ஆண்டு மேட்டூர் தொகுதியில் அவர் பெற்ற 6,273 வாக்குகளே அவர் இதுவரை பெற்ற அதிகபட்ச வாக்குகளாகும்.

