Wednesday, October 8, 2025 9:23 am
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல் தரப்பினர் தலையிட வேண்டியதில்லை. சுற்றுலாத்துறையை மேம்படுத்த எந்த தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்க போவதில்லை. போலியான விடயங்களை சமூகமயப்படுத்த வேண்டாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் பிரதமருடனான கேள்வி வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறான எண்ணமும் கிடையாது.இந்த விடயம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற சுற்றுலாத்துறை தினத்தின் போது பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே அரசாங்கத்தின் கொள்கையாகும்.
இலங்கையில் தன்பாலினத்தவர்கள் தொடர்பில் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 365 (ஆ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ,மாநாயக்க தேரர்களிடமும், மத தலைவர்களிடமும் எடுத்துரைத்துள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட சமூகத்தினருக்கு மாத்திரம் சிறப்பு சலுகை வழங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.
நாட்டின் கலாசாரத்துக்கு முரணான வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் கொள்கை அரசாங்கத்துக்கு கிடையாது. சுற்றுலாத்துறை அதிகார சபை வெளியிட்ட அறிக்கை பற்றி பேசப்படுகிறது.
அந்த அறிக்கையில் ஒரு பகுதியை மாத்திரமே ஒரு தரப்பினர் தமது அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள்.அந்த அறிக்கையின் இறுதி பந்தியில் ‘ இந்த விடயம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சருக்கும், அரசாங்கத்துக்கும் குறிப்பிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் சுற்றுலாத்துறை அதிகார சபை இந்த அறிக்கையை வெளியிடவில்லை. இந்த விடயம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவருடன் கலந்துரையாடி, அரசாங்கத்தின் கொள்கையை எடுத்துரைத்துள்ளார்.உணர்வுபூர்வமான விடயத்தை அரசியலுக்காக பயன்படுத்தும் போது ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இதில் அரசியல் தரப்பினர் தலையிட வேண்டியதில்லை. சுற்றுலாத்துறையை மேம்படுத்த எந்த தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்க போவதில்லை என்றார்.