Wednesday, January 21, 2026 8:19 pm
2026-ஆம் ஆண்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாகோஸ் தீவுகள் விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எதிர்ப்பை அதிரடியாக பதிவு செய்துள்ளார். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவுக்கூட்டங்களின் இறையாண்மையை மொரீஷியஸ் நாட்டிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசு மேற்கொண்ட முடிவை “மிகப்பெரிய முட்டாள்தனம்” என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
சாகோஸ் தீவுகளில் அமைந்துள்ள டியாகோ கார்சியா ராணுவ தளம் அமெரிக்காவிற்கு பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமானது. முன்னதாக 2025-ல் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்திருந்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இந்த தீவுகளை மொரீஷியஸிடம் வழங்குவது சீனா ,ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும், இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பலவீனமான செயல் என்றும் அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் இந்த செயலை தனது கிரீன்லாந்து கையகப்படுத்தும் முயற்சிக்கு ஒரு காரணமாகவும் அவர் முன்வைக்கிறார். “பிரிட்டன் போன்ற நட்பு நாடுகளே முக்கியமான தீவுகளை விட்டுக்கொடுக்கும் போது, ஆர்க்டிக் பகுதியில் பாதுகாப்பு பலத்தை பெருக்க கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவது அவசியமாகிறது” என்பது ட்ரம்ப்பின் வாதம். எனினும், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், டியாகோ கார்சியா தளம் அடுத்த 99 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து,அமெரிக்கா ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பதால் இதில் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

