Tuesday, January 20, 2026 7:04 am
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) ‘பத்மபாணி விருது’ வழங்கப்பட உள்ளது என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மும்பை சத்ரபதி சம்பாஜிநகரில் இவ்விழா நடைபெறுகிறது. தொடக்க நாளான ஜனவரி 28 அன்று, தேசிய, சர்வதேச கலைஞர்கள் ,பிரபலங்கள் ஆகியோர் முன்னிலையில் இளையராஜா கௌரவிக்கப்படுவார்.
திரை விமர்சகர் லத்திகா பட்கோன்கர் (தலைவர்), திரைப்பட தயாரிப்பாளர்களான அசுதோஷ் கோவாரிக்கர், சுனில் சுக்தங்கர், சந்திரகாந்த் குல்கர்னி அடங்கிய குழு இளையராஜாவை விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. பத்மபானி நினைவுப் பரிசும், கௌரவப் பத்திரமும், 2 லட்சம் ரூபா ரொக்கப் பரிசும் அவருக்கு வழங்கப்படும்.
பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குனர்-எழுத்தாளர் சாய் பராஞ்ச்பே, நடிகர் ஓம் பூரி போன்ற ஆளுமைகளும் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

