Saturday, February 14, 2026 9:29 pm
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதியரான சுந்தர். சி – குஷ்பு குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் சினிமா பாதையில் காலெடுத்து வைத்துள்ளது. இரு மகள்களும் தங்களுக்கென தனித்தனி பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மூத்த மகள் அனந்திதா, உதவி இயக்குநராக பணியாற்றி, விரைவில் தனியாகவே ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
அதே நேரத்தில், இளைய மகள் அவந்திகா நடிகையாக அறிமுகமாகும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹீரோயினாக களமிறங்கும் அவந்திகாவின் முதல் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அவரது சினிமா பயணம் தொடங்கிவிட்டது.
இந்த படத்தின் பெயர் “ஆரம்பம்”. அதே பெயரில் அஜித் குமார் நடித்த படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய ஹிட் ஆனது நினைவிருக்கலாம். அந்த டைட்டிலே இப்போது அவந்திகாவின் சினிமா ஆரம்பத்துக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே பலருக்கு சுவாரசியமாக தெரிகிறது. இந்த படம் மலையாளத்தில் உருவாகினாலும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பான்-இந்தியா ரிலீஸாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை மலையாள இயக்குநர் சுஜீஷ் அன்னி ஈப்பன் இயக்குகிறார். முதல் படமே பல மொழி ரசிகர்களை அடையும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் மலையாள சினிமாவின் அனுபவம் வாய்ந்த நடிகர்களான இந்திரன்ஸ், அல்தாஃப் சலீம், விஜயராகவன், கிருஷ்ணா சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். முதல் படமே இப்படிப்பட்ட நட்சத்திர பட்டாளத்தோடு உருவாகுறது, அவந்திகாவுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். குஷ்புவின் முதல் படத்தில் நடித்த சரிதா மகளுடைய முதல் படத்திலும் நடிக்கிறார்.

