ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியிருந்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஈரானுக்குள் ஊடுருவிய மொசாட் உளவாளிகள்தான் காரணம் என்று கூறி ஈரானுக்குள் செயல்படும் ஸ்டார்லிங்க் இணைய சேவையை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
இந்த தாக்குதல் எப்படி நடந்தது? தாக்குதலுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையை ஈரான் தொடங்கியது. விசாரணையில், ஈரானுக்குள் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்றும், அவர்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் முக்கிய தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்த சட்டப்படி தடை விதிக்கப்பட்டது. மீறி பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், உளவாளிகள் தொடர்ந்து இந்த சேவையை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த சேவை மூலம் ஈரானுக்குள் இருந்த முக்கிய தகவல்கள் ரகசியமாக கசியவிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த சேவையை பயன்படுத்தியவர்களை ஈரான் அரசு தேடி, தேடி வேட்டையாடி வருகிறது.