போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு எதிர்பாராத விஜயம் மேற்கொண்ட இங்கிலாந்து இளவரசி அன்னே, அங்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தபோது, அங்குள்ள குழந்தைகள் நினைவிடத்தில் ஒரு கரடி பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பின் கொடூரங்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் ,குடும்பங்களுடன் ஒற்றுமையைக் காட்டும் வகையில், வெளியுறவு அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், மன்னரின் சகோதரி செவ்வாயன்று தலைநகர் கீவ் சென்றார்.
உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆதரவு குறித்து விவாதிக்க இளவரசி ராயல், ஜெலென்ஸ்கியை சந்தித்தார் .
பாதுகாப்பு காரணங்களுக்காக முன்கூட்டியே விளம்பரப்படுத்தப்படாத அன்னேயின் ரகசிய வருகை, ரஷ்ய வான்வழி குண்டுவீச்சு கீவில் குறைந்தது நான்கு பேரைக் கொன்று, 12 வயது சிறுமி உட்பட குறைந்தது 70 பேரைக் காயப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்தது.12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தாக்குதல், சமீபத்திய மாதங்களில் நடந்த மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகும்.
போர் முனையில் வாழும் குழந்தைகளின் அதிர்ச்சிகரமான அனுபவங்களை எடுத்துக்காட்டுவதே அவரது பயணத்தின் நோக்கமாக இருந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நினைவிடத்தில் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவுடன் இணைந்த அன்னே, மோதலில் கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெட்டியை விட்டுச் சென்றார், தனது மகள் சாரா டிண்டலுக்கும் அதே கரடி இருந்ததாகக் கூறினார்.
நினைவுச்சின்னத்தின் அடிப்பகுதியில் பாரம்பரிய தோற்றமுடைய டெடி பொம்மையை ஏராளமான பிற அன்பான பொம்மைகளுடன் வைத்த பிறகு 75 வயதான இளவரசி பின்வாங்கியபோது, திருமதி ஜெலென்ஸ்காவிடம் “அது என் மகளிடம் இருந்தது.” எனக் கூறினார்.திருமதி ஜெலென்ஸ்காவும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு கரடியை விட்டுச் சென்றார்.