பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விஸா ரத்து, எல்லை மூடல், சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து ஆகியவை இதில் முக்கியமான சில முடிவுகள்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் நாட்டையே பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வைத்து இன்று மாலை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாகா – அட்டாரி எல்லை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் வந்தவர்கள் இதே வழியாக மீண்டும் பாகிஸ்தான் திரும்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. மே 1ம் திகதிக்குள் அவர்கள் வெளியேறி விட வேண்டும்.
பாகிஸ்தானியர்களுக்கு விஸா தருவதையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தரப்பட்டுள்ள விஸாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவ ஆலோசனை அதிகாரிகள் அனைவரும் ஒரே வாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 56 லிருந்து 30 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மே 1ம் திகதி முதல் அமலுக்கு வரும்.இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள பாதுகாப்புத்துறை, ராணுவ ஆலோசகர்களை இந்தியாவும் திரும்பப் பெறுகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் துணைத் தூதரகங்களில் உள்ள இந்தப் பதவிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தற்காலிகமாக இரத்து செய்யப்படும்.