யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு, யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த யுவதியும் , பூநகரி பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.
அந்நிலையில் யுவதியின் பெற்றோர், தமது பிள்ளையை காணவில்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, குறித்த யுவதி திருமணம் செய்து வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து குறித்த பெண்ணையும், அவரது கணவரையும் பொலிஸ் நிலையம் அழைத்து பெற்றோரின் முறைப்பாட்டை முடிவுறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கு யுவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால், மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்குக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு நேற்றைய தினம் யுவதியும் அவரது கணவரும் வழக்கு விசாரணைக்காக சமூகம் அளித்த பின்னர், இருவரும் நீதிமன்றை விட்டு வெளியே வந்த நிலையில் , நீதிமன்றுக்கு அருகில் பட்டா ரக வாகனத்தில் காத்திருந்த யுவதியின் சகோதரன் அடங்கிய கும்பல் , யுவதியின் கணவன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு , யுவதி மீதும் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.