Sunday, March 22, 2026 2:43 pm
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கும் நிலையில், பொன்முடி ஏற்கனவே விருப்ப மனு அளிக்கவில்லை. இருப்பினும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட பொன்முடி மகன் கவுதம சிகாமணி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அடையாளமாக இருந்த பொன்முடி, 2011 சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியிலேயே சிவி சண்முகத்திடம் தோல்வி அடைந்தார். இதன்பின் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட தொடங்கினார். 8 முறை எம்எல்ஏ-வாக இருந்த பொன்முடி, இம்முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கூட அளிக்கவில்லை.
கடந்த ஆண்டு சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பொன்முடி பதவியை பறி கொடுத்தார். இதன்பின் திமுகவில் பொறுப்பு அளிக்கப்பட்டாலும், அமைச்சர் பதவி இல்லாததால், பொன்முடி பல்வேறு விவகாரங்களில் ஒதுங்கியே இருந்தார். அதேபோல் தனது மகனுக்கு சீட் பெற்றுக் கொடுக்கும் முடிவுக்கு பொன்முடி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

