Saturday, July 19, 2025 7:59 am
கொழும்பு – கஹதுடுவ பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது புனையப்பட்ட செய்தியா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கஹதுடுவ பகுதியில் கடந்த 16ஆம் திகதி பாடசாலை மாணவன் ஒருவன் மேலதிக வகுப்புக்குச் செல்வதற்காக வீடட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவன் சுமார் 100 மீற்றர் தூரம் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது சைக்கிளின் சங்கிலி திடீரென அறுந்துள்ளது.
பின்னர் பாடசாலை மாணவன் சைக்கிளின் சங்கிலியை சரிசெய்துவிட்டு மேலும் சுமார் 700 மீற்றர் பயணித்துக்கொண்டிருக்கும்போது ரப்பர்வத்த பகுதியில் வெள்ளை நிற சிறிய வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து வேனில் இருந்தவர்கள் பாடசாலை மாணவனை சைக்கிளுடன் வேனில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
வேனில் இருந்தவர்கள் பெட்டி கடை ஒன்றில் வேனை நிறுத்தியுள்ள நிலையில், பாடசாலை மாணவன் வேனிலிருந்து வெளியே குதித்து தப்பிச் சென்றுள்ளார்.
பாடசாலை மாணவன் இது தொடர்பில் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பொலிஸார் இது புனையப்பட்ட செய்தியா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.