பிரித்தானியாவின் முதல் திருநங்கை (Transgender) நீதிபதியான விக்டோரியா மெக்லவுட்( Victoria Mc Cloud ) உயர் நீதிமன்றத்தின் Equalities Act தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் (ECHR) மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரித்தானியாவின் உயர்நீதிமன்றம் வெளியிட்ட சமீபத்திய தீர்ப்பில், பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவரே பெண் என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், திருநங்கைகளை (Transwomen) பெண்களாகக் கருத முடியாது எனவும் நீதிமன்றம் தீர்பளித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்றின் குறித்த தீர்ப்பு அந்நாட்டில் உள்ள குயர் (LGBTIQA+) சமூகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, லண்டனில் ஆயிரக்கணக்கான குயர் ஆதரவாளர்கள் பேரணியில் கலந்து கொண்டு, “திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பு, பாலின அடிப்படையில் தனித்துவமான இடங்களைப் பயன்படுத்துவதில் (பெண்கள் கழிப்பறைகள், மருத்துவமனைகள், விளையாட்டு குழுக்கள்) பாலின மாற்றம் செய்த பெண்களுக்கு புதிய தடைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த தீர்ப்பு திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களின் இடம் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் Equalities Act தொடர்பான தீர்ப்பை எதிர்த்து பிரித்தானியாவின் முதல் திருநங்கை (Transgender) நீதிபதியான விக்டோரியா மெக்லவுட், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் (ECHR) மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் இந்த தீர்ப்பு திருநங்கை சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும் என குற்றஞ்சாட்டியிருக்கிறார். அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும்.
“Article 6 of the European Convention on Human Rights” சட்டப்படி சுதந்திரமான விசாரணை செய்யும் உரிமை” மீறப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிபதி மெக்லவுட் 20 வயதில் தன்னை திருநங்கையாக வெளிப்படுத்தியதோடு தனது பிறப்புச் சான்றிதழில் பாலினத்தை சட்டரீதியாக மாற்றிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.