Monday, September 22, 2025 11:12 am
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் பெண்கள் , குழந்தைகள் உட்பட குறைந்தது 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில், பஷ்டூன்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாட்ரே தாரா கிராமத்தின் மீது JF-17 போர் விமானங்கள் எட்டு LS-6 ரக குண்டுகளை வீசியுள்ளன.
இந்தத் தாக்குதலில் கிராமத்தின் பெரும் பகுதி அழிந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் விமானப்படை அப்பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்(TTP) அமைப்பின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் பொதுமக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாகாணங்களில் இது தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் ஏழு TTP பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள்.
இந்தச் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு பயங்கரவாதிகளை ஆதரிப்பதா அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

