விநாயகர் வணக்கத்தில் ஒரு சிறப்பான செயற்பாடு நாம் காலாகாலமாக போட்டு வரும் தோப்புக்கரணம். இன்று இது Super Brain Yoga என்ற பெயரில் யோக வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படுவதோடு, மேலை நாடுகளில் அதன் பயன்களும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே எமது முன்னோர்களின் ஆழ்ந்த அறிவின் பயனாக எமக்கு விட்டுச் சென்ற, எமது உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்தும் பல செயற்பாடுகள் வேறுநாட்டவர்களால் கண்டறிப்பட்டு எமக்கே திருப்பவும் கற்றுத்தரும் காலம் உண்மையில் வந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். எமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வந்த பண்பாட்டு, சமய செயற்பாடுகளின் பின் ஏதோவொரு விஞ்ஞான காரணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டே வருகிறது. இந்த வகையில் தோப்புக்கரணத்தின் பயன்களும் பலரை யோக ஆசனங்களுடன் இணைந்ததாக பயிற்சி செய்ய தூண்டி வருகிறது.
தோப்புக்கரணம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய சில புராணக் கதைகள் இருந்தாலும், எம்முள் இறைநிலையை உணரும் யோகநிலை நின்று நோக்கும் போது மட்டுமே அதன் ஆன்மீக விஞ்ஞானத்தை அறிந்து கொள்ள முடியும். வாசியோகத்தின் குறியீடே விநாயகர் வடிவம். நாதம், விந்து என்ற சிவசக்தி சேர்க்கையே வினாயகர் வடிவம். பிள்ளையார் சுழி பொட்டு எழுதத் தொடங்கும் பழக்கம் உள்ளவர்கள் நாம். உகரத்தையே நாம் பிள்ளையார் சுழியாக இடுகிறோம். 36 தத்துவங்கள் எமது சமயத்தில் கூறப்படுகின்றன. மேல் இருக்கும் தத்துவம் நாதம், அதற்கு அடுத்து வருவது விந்து தத்துவம். நாதத்திற்கு வட்டத்தையும், விந்திற்கு கொடு ஒன்றையும் போட உகாரமாகிய பிள்ளையார் சுழி உருவானது. எமது எருவாய்க்கும் கருவாய்க்கும் இடையில் உள்ள மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை உச்சிக்கு மேலெழச் செய்வதன் மூலம் சிவத்துடன் இணையச் செய்து பேரானந்த அனுபவத்தைப் பெறலாம். இந்த மூலாதாரத்தின் கடவுளாகப் போற்றப்படுபவர் விநாயகர். உடலியல் மற்றும் ஆன்மீக சக்திநிலையை தூண்டிவிடும் ஆற்றல் தோப்புக்கரணத்துக்கு இருக்கிறது. படிப்பில் கவனம் சிதறும் மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் ஆற்றலை தூண்டிவிடும் பயிற்சியாக ஆரம்பித்து தண்டனையாக இது மாற்றமடைந்திருக்கலாம்.

செய்யும் முறை ;
- ஆரம்ப நிலையில் கால்களுக்கிடையிலான இடைவெளி தோள்மூட்டுகளின் அகலத்துக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்.
- இடது கைவிரல்கள் வலது காது மடலையும், வலது கைவிரல்கள் இடது காது மடலையும், கட்டைவிரல் காதுமடல்களின் முன்புறமாகவும், ஆட்காட்டி விரல் பின்புறமாகவும் இருக்க பிடித்துக் கொள்ள வேண்டும்.
- மூச்சை உள்இழுத்தபின், மூச்சை வெளிவிட்டவாறு முடிந்த வரை முழங்கால்களை மடித்து இருக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும். பின்னர் மூச்சை உள்இழுத்தவாறு பழைய நிலைக்கு வரவேண்டும்.
- எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஒவ்வொரு நாளும் செய்யலாம்.
பயன்கள் ;
- காது முனைகளில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளின் தூண்டுதலினால் மூளைக் கலங்கள் சக்தி பெறுவதால் அறிவாற்றல் அதிகரிக்கிறது.
- மனதை அமைதிப்படுத்துகிறது.
- எமது இட,வல மூளைப்பகுதிகள் ஒத்திசைந்து தொழிற்படுகின்றன. எமது உணர்வுகளில் அமிழ்ந்து போகாமல் அதனை நிதானமாக அவதானித்து எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.
- சுத்த இரத்தமானது இதயத் தொழிற்பாட்டின் முலம் உடலெங்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அசுத்த இரத்தமானது மீண்டும் இதயத்துக்கு எடுத்த வரப்படுவதற்கு இரண்டாவது இதயம் என்று அழைக்கப்படும் காலின் பின் தசைகள் (Calf Muscles) இத்தொழிற்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இத்தசைகளை இயக்குவதில் தோப்புக்கரணமும் முக்கிய பங்கை வகிக்கிறது.
- மாணவர்களுக்கு மனக்குவிப்பு, ஞாபகசக்தி மற்றும் பரீட்சைகளில் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழக கதிரியக்க விஞ்ஞான பீட மருத்துவரான ஜோயி.பி.ஜோன்ஸ் அவர்களின் ஆராய்ச்சி முடிவின் படி தோப்புக்கரணமானது எமது உடலின் சக்தி மையங்களுடன் இணைந்து தொழிற்படுகிறது. இந்த சக்தி மையங்கள் சக்தியைப் பெற்று, உடலின் சகல பகுதிகளுக்கும் அனுப்பும் தொழிற்பாட்டைச் செய்கின்றன. இவரின் ஆராய்வின் படி, தோப்புக்கரண பயிற்சியின் பின் EEG Scan அறிக்கையானது இட, வல மூளைப்பகுதிகள் ஒத்திசைவுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. எமது நுட்ப உடலின் கீழ் சக்கரங்களில் உறங்கும் சக்தியை மேலெழச் செய்வதால் ஏற்படும் யோகப் சாதனையின் பலன்களை இந்த ஆராய்ச்சி முடிவுகளிலும் காண முடிகிறது.
யோகக் கலையும் மாற்றுத்திறனாளிகளும்
கனடா, ரொரன்ரோ நகரில் மாற்றுத் திறனாளிகளுடன் பல ஆண்டுகளாக தொண்டாற்றி வருபவரும், யோக பட்டதாரியுமான திருமதி. சுபா நகுலானந்தன் அவர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.
யோகம் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை யோகமாகுமா? நிச்சயமாக. ஒரு சுமூகமான நாள் உருவாக எமக்குத் தேவையானது அளவான நித்திரை தான். இதற்கு உதவக் கூடியது யோகா பயிற்சிகள். மாற்றுத் திறனாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி மூலம், முக்கியமாக ‘நாடி சுத்தி’ மூலம் அவர்கள் மூளையில் ஒரு சமநிலையைக் கொண்டு வரலாம். இதனால் கிடைக்கும் தற்காலிக அமைதியினால் நித்திரை இலகுவாகக் கிடைக்கும். ‘பிரமரி’ பிராணாயாமமும் கூட இந்த அமைதி நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியதே.
‘ஓம்’ மற்றும் ‘காயத்ரி’ மந்திரங்கள் இலகுவாக பயிற்றப்படுவதால் நல்ல பலனைப் பெறலாம். சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் ஒரு சுற்றில் 24 ஆசனங்களைச் செய்வதோடு உடல் ஆரோக்கியமும் பேணப்படுகிறது.
‘தோப்புக்கரணம்’ இந்த சிறார்களிற்கு உடல் வலிமையைக் கொடுக்கிறது. நெகிழ்வுத் தன்மையை மூட்டுகளிற்குக் கொடுக்கிறது. சுவாசத்துடன் கூடிய இந்த பயிற்சியின் போது, உள்ளெடுக்கும் ஒட்சிசன் அளவு அதிகரிக்க தளர்வுத் தன்மை கூடும். இதனால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. ஏனைய இளம் சிறார்கள் போலவே இடுப்பின் அளவு குறைவடையும் போது, மேலும் செய்யும் ஆர்வத்தையும், இதன் பயனாக ஆரோக்கியம் மேம்படுவதையும் காணலாம்.
தோப்புக்கரணத்தை காலையில் இறை வழிபாடு முடிந்த பின்னரும், நித்திரைக்கு முன்னரும் (தானாகவே படுத்துக்கொள்ள), பகலில் கட்டுப்பாடு இல்லாது இருக்கும் சந்தர்ப்பங்களிலும் செய்யலாம், என்கிறார் திருமதி சுபா நகுலானந்தன்.
இனிவரும் காலங்களில் விநாயகருக்கு பாசாங்கு செய்வதை விட்டு முறையாக தோப்புக்கரணம் போட்டுப் பழகுவோம். ஆசிரியர்கள் அன்புத் தண்டனையாக கொடுப்பதும், மாணவர்கள் விருப்புடன் செய்து படிப்பில் முன்னேற்றம் காண்பதும் தொடரட்டும்.