அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்து இருக்கிறார். இன்று காலை திமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியான பிறகு தான், அதுவும் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற பிறகுதான் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டிருக்கிறார் .
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருக்கும் பல நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஜெயக்குமார், அன்வர் ராஜா, வளர்மதி, வீரமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் நேரடியாகவே இது தொடர்பாக பேசி இருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி போன்ற சீனியர் அமைச்சர்களின் வற்புறுத்தலால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
அதிமுகவை சீரழிப்பதற்குதான் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது என திமுகவில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். பாஜக கையில் சிக்கியுள்ளது அதிமுக. 3 முறை பேட்டி அளித்த அமித் ஷா ஒரு இடத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி என்று கூறவில்லை. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை எடப்பாடியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று நேற்றுதான் பழனிசாமி கூறியுள்ளார். பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி; மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப்பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவருக்கு இணையான தலைவர் யாருமில்லை என்றும் கூறினார்.