(கர்ம யோகம் )
தவம் என்றதும் காடு, மலை மற்றும் ஆற்றங்கரைகளை நாடிச் சென்று ஞானம் பெற்ற பல யோகியரின் கதைகள் நமக்கு ஞாபகம் வரலாம். தற்காலத்தில் நகர்ப்புற யோகி(Urban Yogi) என்ற பதம் கையாளப்படுகிறது. கிரியா பாபாஜியிடம் தீட்சை பெற்ற யோக அவதார் லாகிரி மகாசாயரின் வாழ்க்கை பலருக்கு முன்மாதிரியாக இருந்தது. ஆங்கில ஆட்சியின் இராணுவ பொறியியல் பிரிவில் கணக்காளராகவும், குடும்பத் தலைவராகவும் அதே நேரம் கிரியா யோகியாகவும் வாழ்ந்து பல சீடர்களையும் உருவாக்கினார். இல்லற யோகி என்ற சொல்லாடல் பிரபலமாவதற்கு உதாரணமாக திகழ்கிறார். இன்று நகரங்களின் சந்தடி மிக்க சாலைகளில் நாம் அறியாமலே, சாதாரணமாக நம்மைப் போலவே உடையணிந்த தன்னையுணர்ந்த யோகியை, ஞானியை கடந்து செல்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. பாபாஜியின் கிரியா யோகம் உலகமயமான பின்பு, பல்வேறு பேதங்களைக் கடந்து இந்த யோகமானது விஞ்ஞான பூர்வமாக மனிதனில் தூங்கும் உயரிய உணர்வுநிலையைத் தூண்டி எழுப்பி, அவனை பரிணாம வளர்ச்சியின் இன்னொரு நிலைக்கு உயர்த்திவிட வழி வகுத்துள்ளது.
“தவம், சுய அறிதல், செயலின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் கிரியா யோகம்’


(ஞான யோகம் ) (பக்தி யோகம்)
இதில் ‘தவம்’ என்பது சுயஒழுக்கம் அல்லது தியானம் என்ற பொருளில் நம் வினைகளை(கர்மா) மாற்றியமைத்தலோடு தொடர்புடைய செயல் ஆவதால் கர்மயோகம் ஆகிறது. ‘சுய அறிதல்’ என்பது ‘நான் யார்? என்ற சுய தேடல் அல்லது விசாரணையில் ஈடுபடுதலால் ஞானயோகம் ஆகிறது. ‘செயலின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்தல்’ என்பது பக்தியோகம். இந்த மூன்று யோகங்களும் சேர்ந்ததே கிரியா யோகம்.
இது சாதனை பாதத்தின் முதல் சூத்திரம். தவம் என்பதன் வரைவிலக்கணத்தை பலரும் பல்வேறு விதமாகக் கூறியிருப்பினும் பொருளும் விளைவும் ஒன்றுதான்.
உடலும் புலன்களும் தன்வழி செல்லாமல், மனம் என்ற கடிவாளத்தால் உறுதியாக பிடித்து நிறுத்துவதே தவமாகும். இதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, தொடர்ந்தோ செய்யப்படும் தீவிர பயிற்சியின் மூலம் சாத்தியமாக்கலாம். தவம் பற்றிய திருவள்ளுவரின் கருத்துகள் சிந்திக்க வைப்பவை.
‘உற்றநோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.’
தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும், மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாது இருப்பதுமே தவத்தின் வடிவமாகும் என்கிறார். மேலும் வள்ளுவரின் தவம் என்ற அதிகாரத்தின் தொகுப்பினை பார்க்கலாம். துறவு வாழ்வு மேற்கொள்ளுபவர்களுக்கு உணவு முதலியவைகளைக் கொடுத்து உதவ வேண்டியிருப்பதால், தாம் துறவு மேற்கொள்ள மறந்தார்களோ? பொதுமக்கள் என்று நினைவுபடுத்துகிறார். தவ வலிமையால் பகைவரை வெல்லுதலும், நண்பர்களை உயர்வடையச் செய்வதலும், நினைத்த அளவில் சாத்தியமாக்கலாம். இதனை இப்பிறவியிலேயே முயல வேண்டும். தவம் செய்பவர்கள் தம் செயலை, கடமையைச் செய்பவர்களாகவும், மற்றவர் ஆசை வலையில் சிக்கி, முயன்றும் தோல்வியில் முடிவதைக் காண்பர். கொல்லன் உலையில் மின்னும் பொன் போல, துன்பம் வருத்தினும், தவம் செய்வார் தன்னுணர்வில் ஒளிர்வர். இவ்வாறு தன்னை உணர்ந்தவனில் காணும் ஒளிர்வு (தேஜஸ்) , மற்ற உயிர்களும் தொழும்படியாக, மதிக்கும் படியான நிலையைத் தரும். உலகில் ஆற்றல் இல்லாதோர் பலராக இருப்பதற்குக் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே.
விவேகானந்தரின் வாழ்வில் பல நிகழ்வுகள் அவரின் பிரமச்சரிய வலிமையால் ஏற்பட்டவை என்பதை அவரே கூறியிருக்கிறார். பெரிய நூல்களின் பக்கங்களை வாசிக்காமல் வேகமாக தாண்டிச் செல்வதாக மற்றவர்கள் நினைத்து அவரை சோதித்துப் பார்க்க கேள்விகள் கேட்ட போது, எவ்வித தவறுகளும் இன்றி படித்த விடயங்களை கூறி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஐக்கிய நாடுகள் சபையில் அவரின் உரைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு தனது பிரமச்சரிய வலிமையினால் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். பிரமச்சரியம் தீவிரமான மனக்குவிப்பை மட்டுமின்றி, முகத்தில் மலர்வையும்(தேஜஸ்) விவேகானந்தரிடம் ஏற்படுத்தியிருந்தது.
தவம் என்பதற்கு தகித்தல், எரித்தல் என்று பொருள் கூறலாம். எதனை எரித்தல்? மனதின் அழுக்குகளை எரித்தல், யாருக்கும் துன்பம் செய்யாதிருத்தல் என்று தன்னையே தூய்மைப்படுத்தல். ஆன்மீக வளர்ச்சிக்காக மனம், வாக்கு, காயத்தினால் செய்யப்படும் சாதனைகளை தவம் எனலாம். நாம் செய்யும் பல்வேறு பிராணாயாமங்கள் மூலம் மனம் தூய்மையடைகிறது. உடலை வருத்த மனம் ஒருமுகப்படும் நிலை ஏற்படுகிறது. மனமானது விருப்பு-வெறுப்பு, வெற்றி-தோல்வி, சூடு-குளிர், இன்பம்-துன்பம் போன்ற இருமைகளின் கூடாரமாக இருக்கிறது. இதிலிருந்து வெளியேறி சமநிலையுடன் எதனையும் அணுகக் கூடிய யோக வாழ்வுக்குத் தவக்கோலம் வழிவகுக்கிறது. கிரியா யோகமானது மனதை பட்டைதீட்டி, தூய்மையாக்கி, ஒளிர வைப்பதன் மூலம் தன்னை உணரும் நிலைக்கு தயாராக்கி, உயர்த்தி விடுகிறது. மனதைக் கருவியாக கொண்டே, மனதை வெல்வதன் மூலம் மனதைத் தாண்டிய அனுபவத்தைப் பெற வேண்டும். மனம் அடங்குதல் தான் துறவு வாழ்க்கைக்கு முதல்படி. தவமென்பது சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, சமநிலை, இருமைகளின் பாதிப்பில் இருந்து விலகிய நிலை.
கிருஷ்ணரின் உபதேசத்தின் பெயரில் மனம் அமைதியடைந்து செயலின் விளைவில் பற்றின்றி பாரதப் போர் புரிந்த அர்ஜூனன் கர்ம யோகியே. மனம், வாக்கு, காயங்களினால் நாம் செய்யக்கூடிய தவங்களை பகவத் கீதையில் 17 வது அத்தியாயத்தில் காணலாம். கடவுளை, ஆன்மீக குருவை, பெற்றோரை, பெரியோரை வணங்குதலும் மரியாதை செய்தலும் வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையைக் கடைப்பிடித்தலும் நடத்தையில் எளிமையும். விரதம் இருப்பது கூட அக, புற தூய்மைக்கு வழிவகுக்கிறது. திருமண உறவெனும் பிரமச்சரியம் மற்றும் அகிம்சை. இவை யாவும் உடல் அல்லது காயத்தால் செய்யும் தவங்களாகும். உண்மையான பேச்சு, இனிமையான பேச்சு, நன்மை விளைவிக்கும் பேச்சு, பேச்சில் சிக்கனம், பிறர் மனம் நோகாத பேச்சு, ஆன்மீக இலக்கியங்களை முறையாக உரைத்தல் என்பன வாக்கின் தவங்களாகும். புலன் உணர்வுகளில் இருந்து விடுதலையும் அதனால் ஏற்படும் திருப்தியும், எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்று மௌனத்தில் நிலை பெறுதல், நம் நடவடிக்கைகளில் ஒளிவு மறைவின்றி இருப்பதன் மூலம் தூய்மையைப் பேண முடியும், இவற்றின் முடிவில் பிறரின் நலனில் ஏற்படும் ஈடுபாடு என இவை யாவும் மனதின் தவங்களாகும் என பகவத்கீதை கூறுகிறது.
தவத்தில் ஈடுபடாவிடில் என்னவாகும் என்பதற்கு பதிலாக வரும் திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்.
“மனம் வாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத்தகும் ஞானி தானே”
– திருமந்திரம்
நம்மை வினைத்துன்பங்கள் வந்தடைவதற்கு, மனம், வாக்கு, காயத்தால் விளையும் கோபம், பயம், ஆசை, மயக்கம் போன்றவையே காரணமாகின்றன. நம் முறையான தவ செயற்பாடுகள் மூலம் இவற்றைத் தவிர்ப்பதால் வினைப்பதிவுகளை (கர்மா) வென்ற தவஞானி ஆகலாம்.
சஞ்சித கர்மம் எனும் முற்பிறவியில் இருந்து தொடர்ந்து வரும் வினைப்பதிவுகளும், பிரார்த்த கர்மம் எனும் குறிப்பிட்ட பிறவியில் செயற்படத் தொடங்கியுள்ள வினைப்பயன்களும், ஆகாமிய கர்மம் எனும் இப்பிறவியில் புதிதாக சேர்ந்து கொள்கின்ற வினைப்பதிவுகள் என்று மூன்று வகையானவை எமது வினைகள். பிராயச்சித்தம், மேல்பதிவு, தேய்த்தழித்தல் (Expiation, Superimposition, Dissolution) என்று கருமப் பதிவுகளை நீக்கிக் கொள்ள மூன்று வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி. இவற்றில் தேய்த்தழித்தல் என்பது குண்டலினி யோக தவத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்கிறார்.
பதஞ்சலி முனிவர் வரையறுக்கும் கிரியா யோகத்தின் அடுத்த கூறு ‘சுய அறிதல்’ அல்லது ‘நான் யார்’ என்ற ஞானத் தேடலாகும். நம் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாக இந்த தேடல் அமையும் போது விடைகளையும் தேடிக் கண்டு அடையலாம். நான் யார்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கு செல்கிறேன்?, இவ்வுலகில் எனக்கு உரிமையானது எது?, உலகியலில் பற்று கொண்டவனா? இல்லை ‘எல்லாம் அவன் செயல்’ என்று செயலின் பயனில் உரிமை பாராட்டாது, விழிப்புநிலையில் ஆனந்தித்து இருப்பவனா?. எந்த கடமையையும் சமநிலையில் நின்று செய்கின்றேனா?, தனது நற்பண்புகளில் மயங்குவதை விட திருத்தப்பட வேண்டிய குணங்களில் கவனம் செலுத்துகிறேனா?. இது போன்ற முக்கியமான கேள்விகளை எம்மை நோக்கிக் கேட்க வேண்டும். இது தவிர வாழ்வின் பிற சிறிய செயல்கள் கூட நம் சுய அறிதலுக்கு துணை நிற்கும். சாத்வீகமான உணவுப் பழக்கவழக்கம், தினசரி தியானம், நேரத்தை வீணடிக்காமை, இயல்பாக எளிமையாக இருத்தல், நாள் முழுதும் மனதைக் கவனித்தல் இவற்றில் சில. ஞான யோகம் என்றதும் நமக்கு உடனடியாக ஞாபகம் வருவது ரமண மகரிஷியின் ‘நான் யார்’ என்ற ஆன்ம விசாரணை தான்.
கிரியா யோகத்தின் வரைவிலக்கணத்தில் இறுதியாக வருவது ‘ஈஸ்வர பிரணிதானம்’ அல்லது செயலின் பயனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சரணடைதல் அல்லது பக்தி. துன்பம், செயல், செயலின் பயனால் பாதிக்கப்படாத அந்த விசேட புருஷன், ஈஸ்வரன் எனப்படுகிறார். அந்த யாவருக்கும் பொதுவான இறையிடம் தெய்வீக அன்பினால் சரணடைதல் பக்தி ஆகிறது. ஆணவம், பயம், புகழ், பெருமை, பற்று, கோபம் போன்ற மனதின் விருத்திகளுக்குத் தீனி போடும் செயற்பாடுகள் நமது பூரண சரணாகதிக்குத் தடையாக உள்ளன. பக்தியை நாம் படிப்படியாக பல வகைகளில் வளர்த்து வரலாம். ஒன்பது வகையாக பக்திகள் கூறப்படுகின்றன. பெரியவர்களிடம் கேட்டல் மூலமாகவும், ஆன்மீக நூல்கள் மூலமாகவும் வளர்த்துக் கொள்ளும் சரவண பக்தி. பக்தி பாடல்கள், மந்திர உச்சாடனங்கள் மூலமான கீர்த்தன பக்தி. இறைவனை எந்நேரமும் நினைந்துருகும் சமரண பக்தி. அன்பினால் செய்யும் சேவைகள் மூலம் சேவா பக்தி. உள்ளும் புறமும் அர்ச்சித்தல். அகமும் புறமுகாகத் தொழுதல். இறைவனுக்கு அடிபணிந்து தொழுது, அவன் செயல்களைச் செய்வதான தாச பக்தி. நண்பனாய் இறைவனைக் கருதும் சாக்கிய பக்தி. இறுதியாக முற்றிலும் சரணாகதியாகும் ஈஸ்வர பிரணிதானம். பக்தி மார்க்கத்தில் முற்றிலும் சரணடைந்து முத்தியடைந்த பல நாயன்மார்களின் கதைகளையும், மீராபாயின் கிருஷ்ண பக்தியையும் நாம் அறிவோம்.
தவமும் ஞானமும் இறைபக்தியும் உள்ளடங்கிய கிரியா யோகம் பழமையானது. மனிதனைப் பூரணப்படுத்துவது. திருமூலர் பாடல் ஒன்று,
தான் தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான் தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே! (திருமந்திரம் – 257)
இல்லறவாசிகளுக்கு தவத்தின் அவசியத்தை திருமூலர் சிறிது நகைச்சுவையுடன் இங்கு கூறுகிறார். தவமும் பக்தியும் சரணாகதியும் ஒருவனை இறைவனுக்கு அருகில் அழைத்துச் சென்று, உலகியலுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. உடலைத் தெய்வமாக பிழையாக நினைத்து இன்ப, துன்ப நுகர்வுகளால் இறப்பை தானாக வரவழைத்துக் கொள்பவனுக்கு, ஒரு நாள் யமன் வந்து ‘நான் தான் கடவுள்’ என்று அழைத்துச் சென்று விடுவான் என்கிறார். வள்ளுவரின் குறளில் முன்னர் பார்த்தது போல் தவம் செய்து ஆற்றலை அதிகரித்துக் கொண்ட மக்களைக் கொண்ட சமுதாயத்தின் அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகநீதி எப்படி இருக்கும்? வாசகர்களின் கற்பனைக்கு விட்டு விடலாம்.