(ஏகனின் பிரத்தியேகச் செய்தி-
அற்புதன் இனியவன்)
இலங்கையின் தென் பகுதியில் தமது ஆளுமையை கணிசமாக செலுத்திவரும் சீனா, அண்மைக் காலமாக தமிழர் தாயகப் பகுதியையும் தமது ஆளுமையின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அவ்வகையில், தமிழ் அரசியல் மற்றும் உரிமையின் முக்கிய களம் மற்றும் தளமாக தொடர்ந்து திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பாரிய இராஜதந்திர முயற்சியில் சீனா இறங்கியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குள் கால் ஊன்ற முயலும் சீன அரசு அதற்காக யாழ்ப்பாணம் மக்களின் கல்வி மற்றும், கலாச்சார மையமாக திகழும் பல்கலைக் கழகத்திற்குள் பல திட்டங்களின் பெயரில் ஊடுருவ முயற்சித்தனர்.
அத்தனை முயற்சிகளிற்கும் தற்போதைய துணை வேந்தர் சிறிசற்குணராஜா தடையாக இருப்பதாக கருதுவதனால் துணைவேந்தர் மற்றும் வேந்தர்களை தனது சார்பானவர்களை நியமிக்க சீனா தீவிர நடவடிக்கை எடுத்து முயற்சிக்கின்றது.
இதற்காக முதல்கட்டமாக தற்போதைய வேந்தராக பணியாற்றும் பத்மநாதன் வயது மூப்பின் காரணமாக மாற்றலாகவுள்ளதனால் தமக்கு இசைவானவரை நியமிக்க சீனா முயல்கிறது.
அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அடுத்த வேந்தராக முதுபெரும் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை அவர்களை நியமிப்பது குறித்து சாதகமாக பரிசீலிக்க வேண்டுமென்று கொழும்பிலுள்ள சீன தூதரகம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் முதிபெரும் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை அவர்களின் கல்வித் தகமைகள், திறமைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிப்பது சாலப் பொருத்தமாக இருக்கும் என்றும், அதை அரசு சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த கடிதம் கோருகிறது.
எனினும், அந்த கடிதத்தின் உண்மைத்தன்மையை ஏகன் ஊகத்தால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
இவ்வாறு வேந்தரை நியமிக்க முன்னாள் துணை வேந்தரின் பெயரை சீனா பரிந்துரைத்துள்ளதோடு 2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள புதிய துணை வேந்தர் தெரிவிலும் தலையீடு செய்யலாம் எனவும் தமிழர் தரப்பு கல்வியாளர்களால் கருதப்படுகின்றது.